உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 23 வயதான சங்கத் குமார் என்ற இளைஞர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்  விஞ்ஞானி-பொறியாளராகத்  தேர்வாகி சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டில், நாட்டின் புகழ்பெற்ற ஐஐடி  கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற இலக்குடன் அவர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு  நுழைவுத் தேர்வை எழுதினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெறும் 2 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இந்தத் தோல்வியால் முடங்கிவிடாமல், மீரட்டில் உள்ள உள்ளூர் கல்லூரியிலேயே பொறியியல் படிப்பை மேற்கொண்டு, இஸ்ரோவின் கடினமான போட்டித் தேர்வை எதிர்கொண்டார்.  தனது விடாமுயற்சியால் முதல் முயற்சியிலேயே இஸ்ரோவில் விஞ்ஞானியாகத் தேர்வாகி, தற்போது விண்வெளித் துறையில் புதிய அடியெடுத்து வைத்துள்ளார்.

ஐஐடி கனவு கைநழுவியபோதும் மனம் தளராமல் சாதித்துக் காட்டிய சங்கத் குமாரின் இந்த அசாத்தியப் பயணம், தற்போது ‘நீட்’  உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்வுகளில் நாம் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே நமது ஒட்டுமொத்த அறிவுத் திறனையோ அல்லது எதிர்கால வாழ்க்கையையோ மதிப்பிடுவதில்லை. ஜே.இ.இ தேர்வில் வாய்ப்பை இழந்தபோது நானும் வருத்தப்பட்டேன், ஆனால் அதுவே என் வாழ்க்கையின் முடிவு அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, தற்காலிகத் தோல்விகளைக் கண்டு மாணவர்கள் யாரும் மனமுடைந்து தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது; விடாப்பிடியாக உழைத்தால் பெரிய வெற்றிகள் உங்களைத் தேடி வரும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.