மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வரும் 55 வயது நபரின் மனைவி, பல ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளைகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். இதனால், தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த அந்த நபர், தனது கடைசி குழந்தையான 17 வயது சிறுமியை, அவர் 7 வயது சிறுமியாக இருந்தது முதலே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் நடமாட்டத்தையும் மொபைல் பயன்பாட்டையும் தீவிரமாகக் கண்காணித்து வந்த தந்தை, அவரைப் பல தவறான செயல்களைப் பார்க்கக் கட்டாயப்படுத்திச் சித்திரவதை செய்துள்ளார். யாரிடமும் உதவி கேட்க முடியாமல் தவித்த அச்சிறுமி, தனது மொபைலில் இருந்த ‘சாட் ஜிபிடி’ செயலியில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு, இதிலிருந்து தப்பிக்க வழி கேட்டுள்ளார். அதற்கு அந்தச் செயலி, இது கடுமையான குற்றம் என்று எச்சரித்ததோடு, உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய இந்தியாவின் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணையும் (1098) வழங்கியுள்ளது.
இந்த வழிகாட்டுதலின்படி, சிறுமி தைரியமாகத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழந்தை நல அமைப்புகளைத் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட நவி மும்பை காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட தந்தையைக் கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சிறுமிக்கு, நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நல்வழிகாட்டி உயிரைக் காப்பாற்ற உதவியிருப்பது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
