பிஹார் மாநிலம் பெகுசராய் பகுதியில் மனிதநேயமற்ற முறையில், ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டிப்போட்டு 5 பேர் கொண்ட மிருகக் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கடந்த ஜூன் 11-ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அக்கும்பல், அந்தப் பெண்ணின் கணவர் இருந்த அறையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு, பெண்ணின் வாயைச் சேலையால் அமுக்கிக் கடத்திச் சென்றுள்ளது.

ஆள்நடமாட்டமில்லாத இருண்ட பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணை, 5 பேர் அடுத்தடுத்து சீரழித்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல், பெண்ணின் மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பிளேடால் கொடூரமாகக் கீறி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் துப்பாக்கிக் குண்டு, கற்கள் மற்றும் மரக்கட்டைகளைத் திணித்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இக்கொடூரத்தால் மயங்கி விழுந்த அந்தப் பெண் மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினார். ஆனால், 6 நாட்களுக்குப் பிறகு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் (Ultrasound) சோதனையில், அவரது பிறப்புறுப்பில் துப்பாக்கிக் குண்டு, கல் மற்றும் மரத்துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவை வெளியேற்றப்பட்டன.

இச்சம்பவத்தில் போலீஸார் அலட்சியமாகச் செயல்பட்டதாகப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். 3 மாதங்களுக்கு முன்பும் இதே கும்பல் பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றபோது அளித்த புகாரின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததே இந்தத் துணிச்சலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது எஸ்பி-யின் உத்தரவின் பேரில் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்து இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் (Speedy Trial) நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.