பல் மருத்துவமனைகளில் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் கருவிகளால் ஹெச்ஐவி  அல்லது பிற ஆபத்தான நோய்த்தொற்றுகள் பரவுமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் இயல்பாக எழுவதுண்டு. ஆனால், முறையாகப் பராமரிக்கப்படும் நவீன பல் மருத்துவமனைகளில் முறையான கிருமிநீக்க முறைகள் பின்பற்றப்படுவதால் எந்தவொரு தீவிரமான தொற்றும் பரவவே வாய்ப்பில்லை எனச் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் கிருப்நாத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தற்போதுள்ள மருத்துவமனைகளில், ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளித்த பிறகு அனைத்துக் கருவிகளும் சர்வதேசத் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி முழுமையாகச் சுத்தப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆட்டோக்ளேவ்  முறையைப் பயன்படுத்தி 121 டிகிரி முதல் 134 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பம் மற்றும் நீராவி அழுத்தத்தில் குறிப்பிட்ட நேரம் வைக்கப்படுவதால், வீரியமிக்க வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன. மேலும், ஊசிகள், கையுறைகள் மற்றும் சக்‌ஷன் டிப்ஸ் போன்ற பொருள்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் முறையிலேயே கையாளப்படுகின்றன.

கருவிகள் மட்டுமின்றி, பல் மருத்துவ நாற்காலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கூட ஒவ்வொரு நோயாளி அமர்வுக்குப் பிறகும் மருத்துவக் கிருமிநாசினி கொண்டு முறையாகத் துடைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கிருமிநீக்கம் செய்யப்பட்ட கருவிகள் அடுத்த நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் வரை பிரிக்கப்படாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவதால், நோயாளிகள் எப்படிக் கவலையும் இன்றிப் பல் மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.