அயோத்தி ராமர் கோயிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில் பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக அரசை மிகக் கடுமையாகத் சாடியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ராமர் கோயில் காணிக்கையிலிருந்து சுமார் ரூ. 200 கோடி ரொக்கப் பணம் மற்றும் பல பெட்டி வைர நகைகள் திருடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையாக விளங்கும் ராமர் கோயிலிலேயே இவ்வளவு பெரிய கொள்ளை நடந்தும், இதுவரை ஒரு எஃப்.ஐ.ஆர் (FIR) கூட பதிவு செய்யப்படாதது ஏன்? அரசாங்கம் யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது?” என கெஜ்ரிவால் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
राम मंदिर में करोड़ों हिंदुओं की आस्था है। उसी राम मंदिर से करोड़ों रुपये के चंदे की चोरी हो गई, लेकिन एक भी FIR दर्ज नहीं हुई।
सरकार किसे बचा रही है? इस पाप में शामिल लोग कितने भी बड़े क्यों न हों, उन्हें सीधे जेल में डालो। करोड़ों लोगों की आस्था की रक्षा ज़रूरी है। pic.twitter.com/JNgrhGpPs6
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 21, 2026
மத்தியிலும், உத்தரப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ (CBI), அமலாக்கத்துறை (ED) அல்லது மாநில காவல்துறை ஏன் இன்னும் தானாக முன்வந்து சோதனையோ, வழக்கோ பதிவு செய்யவில்லை என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், நடவடிக்கை எடுத்தால் மாநில அரசே கவிழ்ந்துவிடும் என்ற பயம்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராமர் கோயில் ஊழியர்கள் சிலரே இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக வெளியான செய்தித் தொகுப்பைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. இதற்கிடையே, இந்த விவகாரம் பூதாகரமானதால், உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
