ஆண்டாண்டு காலம் பழகிய பாசத்தை விட, பணமும் சிறந்த வாய்ப்புகளுமே மனிதர்களுக்கு முக்கியமா என்ற விவாதத்தை எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவு ஒன்று இணையத்தில் கிளப்பியுள்ளது. அங்கித் பாண்டே என்ற நபர், தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வந்த பெண், திடீரென ஒருநாள் வந்து “தம்பி, நாளைல இருந்து நான் வேலைக்கு வரமாட்டேன்” என்று கூறி அதிர்ச்சி கொடுத்ததாகப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பெண்ணிற்கு ஆண்டுதோறும் 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கி, மாதச் சம்பளமாக ரூ. 15,500 கொடுத்து வந்ததாகவும், பண்டிகை காலங்களில் தாராளமாகப் போனஸ் மற்றும் பரிசுகளை அள்ளித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பெண் 10 முதல் 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்தாலும், ஒருமுறை கூடச் சம்பளத்தை பிடித்தம் செய்ததே இல்லை என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.

வேலையை விட்டு நிற்பதற்கான காரணத்தைக் கேட்டபோது, தனக்கு வேறு இடத்தில் அதிகச் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாக அந்தச் சமையல் பெண் கூறியுள்ளார். அந்தப் பணத்தை அங்கித் பாண்டே தானே தருவதாகக் கூறியும், “இல்லை தம்பி, நான் அங்க அட்வான்ஸ் வாங்கிட்டேன், நீங்க வேற ஆளப் பாத்துக்கோங்க” எனச் சிரித்துக் கொண்டே கூறிவிட்டு இரண்டே நிமிடத்தில் 4 ஆண்டு கால பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். “மனிதர்கள் தங்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள், இதில் தனிப்பட்ட பாசத்திற்கு இடமில்லை” என ஒரு தரப்பினரும், “உதவிகளைப் பெற்றுக்கொண்டு வெறும் ஆயிரம் ரூபாய்க்காக சட்டென உறவை முறித்துக் கொண்டு ஓடிவிடுகிறார்கள்” என மறுதரப்பினரும் இணையத்தில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.