நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ள தமிழக பாஜாகவிற்குள் தற்போது உட்கட்சிப் பூசல் மற்றும் அதிரடி மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகச் சென்னைக்கு வரவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தமிழக பாஜக மையக்குழு நிர்வாகிகளுடன் அமித் ஷா நடத்தவுள்ள இந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பலவீனங்கள் மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து மிகக் கடுமையான கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்துவது குறித்து பல முக்கிய மற்றும் அதிரடி முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த உயர்மட்ட ஆலோசனையின் முடிவில் தமிழக பாஜாகவின் மாநிலத் தலைமையில் அதிரடி மாற்றம் ஏதேனும் ஏற்படுமா அல்லது புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு சோஷியல் மீடியாவிலும் நெட்டிசன்களிடையேயும் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
