தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், பிரசவத்திற்கு வந்த தாயும் அவரது பிறக்காதக் குழந்தையும் அடுத்தடுத்து மரணமடைந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாவட்டத்தின் குண்டாலா மண்டலத்தைச் சேர்ந்த சட்லா வனஜா (21) என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்தச் சமயத்தில் மருத்துவமனையில் மருத்துவர் யாரும் இல்லாததால், அங்கிருந்த நர்ஸுகளே அவசர அவசரமாகப் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பிறந்த பெண் குழந்தை சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பிரசவத்திற்குப் பிறகு வனஜாவுக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயர சம்பவத்தை அடுத்து, உறவினர்கள் வனஜா மற்றும் அவரது குழந்தையின் உடல்களை அன்றைய தினமே தகனம் செய்துவிட்டனர். ஆனால், இறுதிச் சடங்கின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை அன்று அவரது அஸ்தியை (சாம்பலை) எடுக்கச் சென்ற குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் அங்கு காத்திருந்த அதிர்ச்சி அவர்கள் ரத்தத்தையே உறைய வைத்துள்ளது.
வனஜாவின் அஸ்திக்கு நடுவே அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இரும்புக் கத்தரிக்கோல் ஒன்று இருந்துள்ளது. பிரசவத்தின் போது ஏற்பட்ட ரத்தப்போக்கை நிறுத்தப் பஞ்சு வைக்கும் போது, மருத்துவ ஊழியர்கள் அந்தக் கத்தரிக்கோலை வனஜாவின் வயிற்றுக்குள்ளேயே வைத்துத் தையல் போட்டு மறந்ததுதான் இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணம் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட மருத்துவ அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்து குண்டாலா மருத்துவ அதிகாரி சுதீப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
