இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே முடி உதிர்தல் மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளால் பலரும் கவலைப்பட்டு வரும் வேளையில், 80 வயதிலும் பெண்களுக்கு நீண்ட, அடர்த்தியான கருங்கூந்தல் இருக்கும் சீனாவின் ஒரு கிராமத்தின் பாரம்பரியம் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தென்மேற்கு சீனாவின் இந்த அழகிய பள்ளத்தாக்கு கிராமம், அங்குள்ள பெண்களின் நம்ப முடியாத நீளமான கூந்தல் காரணமாக விசித்திரக் கதைகளில் வரும் விசித்திரக் கதாபாத்திரமான “ரபுன்செல் கிராமம்” என்று அழைக்கப்படுகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டில் “மிக நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களின் மிகப்பெரிய குழு” என்ற பெருமையுடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ள இக்கிராமத்துப் பெண்கள், தங்களது வாழ்நாளில் 18 வயதை எட்டும் போது ஒரே ஒருமுறை மட்டுமே முடி வெட்டும் விசித்திர சடங்கைப் பின்பற்றுகின்றனர்.
அவ்வாறு வெட்டப்படும் முடி தூக்கி எறியப்படாமல் பாதுகாக்கப்பட்டு, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டு அவளது சொந்த முடியின் ஒரு பகுதியாகவே சடைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இவர்களின் சிகை அலங்கார வடிவத்தைக் கொண்டே அந்தப் பெண் திருமணமாகாதவரா, திருமணமானவரா அல்லது அவருக்குக் குழந்தைகள் உள்ளனவா போன்ற விவரங்களை எளிதாகக் கண்டறிந்து விட முடியும்.
விலை உயர்ந்த இரசாயன ஷாம்புகளுக்குப் பதிலாக, இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் சேமித்து வைக்கப்பட்ட ‘அரிசி கஞ்சித் தண்ணீரை’ கொண்டு தங்களது தலைமுடியைப் பராமரிப்பதே இவர்களின் நீண்ட, பளபளப்பான கூந்தலின் அசல் ரகசியமாக உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.
இருப்பினும், இவர்களின் நல்ல முடி ஆரோக்கியத்திற்கு அரிசி நீர் மட்டுமன்றி அவர்களின் மரபியல், ஆரோக்கியமான உணவுமுறை, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையும் முக்கியக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
View this post on Instagram
“>
பல நூற்றாண்டுகள் பழமையான இந்தத் தனித்துவமான கலாச்சாரத்தைக் காணவும், கூந்தல் பராமரிப்பு ரகசியத்தைக் கற்றுக் கொள்ளவும் தற்பொழுது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த ரபுன்செல் கிராமத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.
