மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், விநாயகமூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள காலி மைதானத்தில் விளையாடியுள்ளான். அங்கு ஊன்றப்பட்டிருந்த உயரமான குத்துக்கல்லில் சேலையை தொட்டிலாகக் கட்டி அவர்கள் விளையாடியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக தொட்டில் கட்டப்பட்டிருந்த கல்லின் அடிப்பகுதி உடைந்து சரிந்தது. இதில் தொட்டிலில் இருந்த சிறுவன் விநாயகமூர்த்தி தலைகீழாக கீழே விழுந்ததில், அவனது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விளையாட்டின் போது நடந்த இந்த விபரீதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.