புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையிலேயே பிறந்தநாள் கேக் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கோயிலின் அறநிலையத்துறை நிர்வாகியான சேதுப்பிரியா என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயில் வளாகத்திற்குள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஆன்மீக விதிகளுக்குப் புறம்பாக முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாகப் பக்தர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமன்றி, பிறந்தநாள் விருந்துக்காக அந்தப் பெண் அதிகாரி கோயில் நிர்வாகத்தின் பெயரிலேயே ‘சிக்கன் சுக்கா’ உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை வெளியில் இருந்து ஆர்டர் செய்ததாகவும் மற்றுமொரு அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவ்வாறு ஆர்டர் செய்யப்பட்ட அசைவ உணவுகள் அனைத்தும் கோயிலுக்குள்ளேயே வைத்து உட்கொள்ளப்பட்டிருக்கலாம் எனப் பக்தர்கள் மத்தியில் எழும் பலத்த சந்தேகம், ஒட்டுமொத்த ஆன்மீகவாசிகளையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.