கடந்த 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் பயங்கரமான மதியத்தை எவராலும் மறக்க முடியாது. காந்தினகரில் இருந்த ஒரு நிருபருக்கு விபத்து செய்தி கிடைத்தவுடன், உடனடியாக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு விரைந்தார். இது பற்றி அவர் கூறியதாவது, ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையான அது, அன்று மரண ஓலங்களாலும், பிண வாடையாலும் நிறைந்திருந்தது. லண்டன் நோக்கிப் புறப்பட்ட அந்த போயிங் ட்ரீம்லைனர் விமானம், கிளம்பிய 30 விநாடிகளில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி உணவகத்தின் மீது விழுந்து 1,25,000 லிட்டர் எரிபொருளோடு வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் எனப் பலரும் கருகிப் பலியாகினர். உறவினர்களைத் தேடி அலையும் மக்களின் கதறல்களுக்கு மத்தியில், “விமானத்தில் பயணித்த எவருமே உயிரோடு இருக்க வாய்ப்பில்லை” எனப் போலீஸ் கமிஷனர் அறிவித்த அந்தச் சூழலில் தான், மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவில் ஒரு அதிசயத்தைக் கண்டேன்.

அங்கே, நெஞ்சு மற்றும் கால்களில் லேசான காயங்களுடன், அரை நிர்வாண நிலையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார். அவரிடம் பேச முற்பட்டபோது, எனது ஐபோன் சார்ஜரை வாங்கித் தன் தந்தையிடம் தான் நலமாக இருப்பதாகப் பேசினார். பின்னர் தன் பாக்கெட்டில் இருந்து அவர் எடுத்துக் காட்டிய போர்டிங் பாஸ்  மற்றும் பாஸ்போர்ட்டைப் பார்த்தபோதுதான், அவர் அந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் என்பது உறுதியானது. அவர்தான் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயது விஸ்வாஸ் குமார் ரமேஷ். அவர் 11A என்ற அவசரக் கால வழி (Emergency Exit) இருக்கையில் அமர்ந்திருந்ததால், விபத்தின் தாக்கத்தில் விமானத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.

“விமானம் பயங்கர சத்தத்துடன் நொறுங்கிய அடுத்த நொடி, நான் பிணக்குவியல்களுக்கு நடுவே கிடந்தேன்; பயத்தில் ஓடி வந்த என்னை ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர்” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கூறினார். மேலும், தன்னுடன் பயணித்த சகோதரர் அஜயைக் கண்டுபிடித்துத் தருமாறு அவர் என்னிடம் கைகளைக் கூப்பிக் கெஞ்சியபோது, எனக்கு நெஞ்சடைப்பது போல் இருந்தது. ஏனெனில், அவரது சகோதரர் உட்பட மற்ற 241 பேரும் இறந்துவிட்டனர் என்ற கோர உண்மையை அவரிடம் சொல்லும் துணிவில்லாமல், கனத்த இதயத்தோடு நான் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினேன் என்றார்.