இன்றைய பரபரப்பான உலகில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில், பீட்ஷா ஊழியர்களின் சாதுரியத்தால், மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்குள்ள உள்ளூர் பீட்ஷா கடையில் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு நேரத்தில் பீட்ஷா ஆர்டர் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இத்தனை வருட பழக்கத்தால், அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்கும் அவரது பெயரும், அவருக்குப் பிடித்த பீட்ஷா வகையும் அத்தப்படியாகத் தெரிந்திருந்தது. இப்படி எல்லாமே சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த சூழலில், கடந்த 2016-ஆம் ஆண்டு திடீரென தொடர்ந்து 11 நாட்களாக கிர்க்கிடம் இருந்து ஒரு ஆர்டர் கூட வரவில்லை. தினமும் ஆர்டர் செய்யும் நபர் திடீரென காணாமல் போனதால் மேலாளருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர் தங்களது டெலிவரி டிரைவரை கிர்க் வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு அனுப்பியுள்ளார். அங்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் விளக்குகளும், டிவியும் ஓடிக்கொண்டிருந்தன.

ஆனால், கதவைத் தட்டியும், போன் செய்தும் உள்ளே இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்த ஊழியர், தாமதிக்காமல் உடனடியாக ‘911’ என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து போலீசாருக்கும், மருத்துவக் குழுவிற்கும் தகவல் கொடுத்தார் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, கிர்க் அலெக்சாண்டர் கடுமையான மருத்துவ அவசர நிலை காரணமாகப் படுக்கையில் மயங்கிக் கிடப்பது தெரியவந்தது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார். “இன்னும் சில மணி நேரம் தாமதித்திருந்தால் கூட அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது” என்று மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

வெறும் வியாபார நோக்கமாக மட்டும் பார்க்காமல், தங்களது வாடிக்கையாளரைக் குடும்ப உறுப்பினர் போலக் கருதி உயிரைக் காப்பாற்றிய ஊழியர்களின் இந்த மனிதநேயக் கதை, தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.