நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன் ஓட்டல் ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். முத்துகிருஷ்ணன் விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அக்காள் ராமலட்சுமியிடம், “அடிக்கடி தனியாகச் சென்று செல்போனில் நீண்ட நேரமாகப் பேசக்கூடாது” என்று கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, கோவில் கொடை விழாவுக்காக முத்துகிருஷ்ணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள கால்நடைகளுக்குத் தீவனம் வைக்கச் சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமி, செல்போனில் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதைப் பார்த்த முத்துகிருஷ்ணன், ராமலட்சுமியை மீண்டும் கண்டித்துள்ளார். ஆனால், அதைப் பொருட்படுத்தாத ராமலட்சுமி, “நான் செல்போனில் அப்படித்தான் பேசுவேன்” என்று கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் எல்லைக்கடந்த ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அக்கா ராமலட்சுமியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, சொந்த அக்காவைக் கொலை செய்த தம்பி முத்துகிருஷ்ணனை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.