“அரசியல்வாதிகள் தவறு செய்வதே இல்லை; அப்படியே செய்தாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள்” என்ற பொதுவான பிம்பத்தை உடைக்கும் வகையில், மேற்கு வங்காளத்தில் இந்த வாரம் அரங்கேறியுள்ள காட்சிகள் அம்மாநில மக்களைக் கண்களைத் கசக்கிக் கொண்டு பார்க்க வைக்கும் அளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மிதினாபூரின் பொடாஷ்பூர் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் அரூப் மைட்டி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், அவர் சாதாரணமாக ராஜினாமா செய்யாமல், ஒட்டுமொத்த கிராம மக்கள் முன்னிலையிலும் தனது காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தனது பதவிக் காலத்தில் தங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் தன்னை மன்னித்துவிடுமாறு அவர் கதறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது இந்திய அளவில் மிகப்பரபரப்பாகப் பேசப்படும் அரசியல் வீடியோவாக மாறியுள்ளது.
இதற்கிடையே, பஸீர்ஹாட் பகுதியில் மற்றொரு விசித்திரமான சம்பவமாக, முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சப்தர்ஷி பானர்ஜி, அரசு வழங்கிய நிவாரணப் பொருட்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். தற்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால் பயந்துபோன அவர், தன் வீட்டில் இருந்த தார்பாய்கள், போர்வைகள், புடவைகள், வேஷ்டிகள் மற்றும் சிறுவர் ஆடைகள் உள்ளிட்ட பெருமளவிலான அரசுப் பொருட்களைத் தாமாகவே முன்வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதேபோல், ஹப்ரா பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறக் கோரி ஒரு குடும்பத்தை மிரட்டிய புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரபீர் மஜும்தார் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். எதிர்கட்சி தலைவர்களின் இந்தத் தொடர் தோப்புக்கரணம், பொருட்கள் ஒப்படைப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கு வங்க அரசியலில் அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
