“கணவர் திருடுவாரு.. நான் பெயில் எடுத்து வெளிய கூட்டிட்டு வருவேன்!” என சென்னை தி.நகரில் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில் கைதான சுமதி என்ற பெண் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தி.நகர் திலக் தெருவில் வசிக்கும் சுஜாதா-வெங்கடேஷ்வர ராவ் தம்பதியினர் கடந்த 1-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், அவர்களது அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டை உடைத்து அலமாரியில் இருந்த 1 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர் ஒருவர் அபேஸ் செய்து தப்பினார்.

இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபல பழைய குற்றவாளி பிரபாகரன் என்பது அம்பலமானது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் பிரபாகரனைப் பிடிக்க தூத்துக்குடி தளவாய்புரத்திற்கு விரைந்தபோது, அவர் நகைகளின் ஒரு பகுதியோடு தப்பியோடிவிட்டார். ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ரகசியமாக மறைத்து வைத்திருந்த அவரது 2-வது மனைவி சுமதியை (47) போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

ஆரம்பத்தில் “எனக்கும் என் கணவருக்கும் சண்டை, அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என போலீசாரை ஏமாற்ற நாடகமாடிய சுமதியின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 சவரன் தங்க நகைகள் மற்றும் 780 கிராம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாட்டியவுடன் உண்மையை ஒப்புக்கொண்ட சுமதி, “அவர் திருடிக் கொடுக்கும் நகைகளை நான் பத்திரமாக வைப்பேன், அவர் ஜெயிலுக்குப் போனால் நான் தான் வக்கீல் வச்சு பெயில் எடுத்து வெளியே கொண்டு வருவேன்” என அசால்ட்டாகக் கூற, மிரண்டுபோன போலீசார் சுமதியை உடனடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். மேலும், மீதி நகைகளுடன் தலைமறைவாக இருக்கும் கொள்ளையன் பிரபாகரனைப் பிடிக்க போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.