தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து த.வெ.க. ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ள நிலையில், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 முதல் 2023-ஆம் வரையிலான திமுக ஆட்சிக் காலகட்டத்தில், மின்சாரத் துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்) கொள்முதல் செய்ததில் சுமார் 397 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி அறப்போர் இயக்கமும், சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இப்புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த விசாரணைக்கு டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ தற்போது முறைப்படி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளதால், அவருக்கு எதிரான பிடி இறுகத் தொடங்கியுள்ளது.
