புனே பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில், தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு கெத்தாக வலம் வந்த 25 வயது போலி பெண் போலீஸை லஷ்கர் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் ஆஸ்திக் இனாம்தார் (என்ற) சமீனா ஆலு பதான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்குள்ள மருத்துவர்களை மிரட்டித் தன்வசப்படுத்த அல்லது அவர்களைச் சந்திப்பதற்காக, அந்தப் பெண் அச்சு அசல் நிஜ போலீஸ் போன்ற காக்கி சீருடை, தோள்களில் நட்சத்திரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ போலீஸ் சின்னங்களை அணிந்து வந்துள்ளார். மருத்துவமனைக்கு அலுவல் விஷயமாக வந்த நிஜ போலீஸ் அதிகாரி மகேஷ் ஷிண்டே என்பவரின் கழுகுப் பார்வையில் அந்தப் பெண் சிக்கியுள்ளார்.

சீருடையில் உள்ள பெயர்ப்பலகை தவறான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததை கவனித்த அதிகாரி, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். தான் ‘பானேர் காவல் நிலையத்தில்’ பணிபுரிவதாகப் பெண் கூற, சந்தேகமடைந்த அதிகாரி பெண் போலீசாரை வரவழைத்து அடையாள அட்டையைக் கேட்டபோது அந்தப் பெண் போலி என்பது அம்பலமானது.

காக்கி சட்டையின் மிடுக்கைக் காட்டி மக்களை ஏமாற்றவே இந்த வேடமிட்டதாகப் பெண் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து லஷ்கர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.