நெரிசல் மிகுந்த மின்சார ரயில் ஒன்றில், பயணி ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் தனது ஆடைகளைக் கழற்றி அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோவில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒரு ரயில் பெட்டியில், நபர் ஒருவர் பொதுவெளியில் என்றும் பாராமல் தனது பேண்ட்டைக் கீழே இறக்கி, கழுத்தில் பெல்ட்டை மாட்டிக்கொண்டு விசித்திரமாக நடந்து கொள்கிறார். இதைப் பார்த்த அங்கிருந்த சக பயணிகள் கடும் அதிர்ச்சியும், முகம் சுளிப்பும் அடைந்தனர். அந்த நபரின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து ரயிலுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபரின் செயலால் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சக பயணிகள் சிலர்ஒரு கும்பலாக அந்த நபரைச் சூழ்ந்துகொண்டு, சரமாரியாக தாக்கினர்.  அடி தாங்க முடியாமல் கதறிய அந்த நபரை, அடுத்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினர். இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த வீடியோவைச் சுற்றி நெட்டிசன்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், “சமூகத்தில் இத்தகைய சீரழிவுகளைத் தடுக்க இதுபோன்ற உடனடி நடவடிக்கைகள் தேவை” என்று பயணிகளின் செயலை ஆதரிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினர், “சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒருவரை மிருகத்தனமாகத் தாக்குவது தவறு” என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.