மத்தியப் பிரதேசம் போபால் சந்திப்பு அருகே  எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் சக பயணிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆடைகள்கிழிக்கப்பட்டு , ஓடும் ரயிலில் இருந்து குதிக்க வைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், ரகுவன்ஷி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் ரயிலின் படியில் தொங்கியபடி, “என் மகள் மீது சத்தியமாக, என் தந்தை மீது சத்தியமாகச் சொல்கிறேன், நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. அவர்கள் என் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள். நான் அவளுக்கு அருகில் தான் அமர்ந்திருந்தேன், வேறு எதுவும் செய்யவில்லை. தப்பு செய்தவன்தான் பயப்படுவான், நான் பயப்பட மாட்டேன்” என்று கதறி அழும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 


ரயிலுக்குள் ஏற்பட்ட திடீர் மோதலில், சக பயணிகள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த நபர் மீது சில புகார்களைக் கூறி, அவரை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரை அரை  நிர்வாணப்படுத்தி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், தாங்க முடியாமல் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர சம்பவத்தில் அந்த நபர் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும், அவர் மீது கூறப்பட்ட புகார்கள் உண்மையா அல்லது ரயிலுக்குள் என்ன நடந்தது என்பதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இதில் தொடர்புடைய வன்முறைக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் உள்ளூர் போலீசாருக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.