உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான ‘டெத் ஜோன்’ பகுதியில் சிக்கி, 6 நாட்களாகக் காணாமல் போய் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஹிலாரி தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மே 29 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துவிட்டு கீழே இறங்கும்போது, சுமார் 24,600 அடி உயரத்தில் உள்ள கேம்ப் 3 பகுதியில் அவர் மற்றவர்களுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும் இப்பகுதியில் இத்தனை நாட்கள் கழித்து யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால், காத்மாண்டுவில் உள்ள அவரது இல்லத்தில் பௌத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்கு சடங்குகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

மேலும், சக மலையேற்ற வீரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் வீடியோக்களையும் பதிவிட்டிருந்தனர். ஆனால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், கும்பு பனிப்பாறைக்கு அருகில் உள்ள பனிச்சரிவில் பேஸ் கேம்ப் நோக்கி தவா ஷெர்பா தவழ்ந்து வருவதை மீட்புக்குழுவினர் வியாழக்கிழமை காலையில் பார்த்துள்ளனர்.

கடும் குளிரின் காரணமாக அவரது கைகளில் பனிப்புண்  ஏற்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை சீராக இருந்ததால் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்ததும் சோகத்தில் இருந்த அவரது குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

எவரெஸ்ட்டில் இந்த மலையேற்ற பருவத்தில் கடுமையான வானிலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மரணத்தின் வாயிலில் இருந்து 6 நாட்களுக்குப் பிறகு மீண்டு வந்துள்ள தவா ஷெர்பாவின் இந்த மறுபிறவி ஒரு நிஜமான இயற்கை அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.