ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால மோதல் மற்றும் பதற்றமான சூழலில், ஒரு முக்கிய திருப்புமுனையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

மேலும் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர் தாக்குதல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியமே பெரும் பதற்றத்தில் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், இறுதி முடிவை காமேனியே எடுப்பார் என்றும் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனியை விரைவில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பகைமையை தணிப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் அச்சத்திற்கு மத்தியில், அதிபர் டிரம்பின் இந்த அதிரடி முடிவு, பிராந்திய அமைதிக்கான புதிய கதவுகளைத் திறக்குமா அல்லது அரசியல் காய்நகர்த்தலாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.