சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து, டெண்டர்கள் மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய கோப்புகளைக் கொண்ட 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதிய மின்சாரத் துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட சில நாட்களிலேயே இத்தகைய துணிச்சலான திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது, துறை அதிகாரிகளின் உடந்தையுடன்தான் நடந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் மின்சாரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், இத்தகைய ஆதாரங்கள் திருடப்பட்டிருப்பது முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடிமறைத்து, அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியோ என்ற கேள்வி எழுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காணாமல் போன ஹார்ட் டிஸ்க்குகளை உடனடியாக மீட்டு, இதற்குப் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.