பாஜகவிலிருந்து விலகிப் புதிய ‘தனி கட்சி’ தொடங்கும் முடிவில் அண்ணாமலை உறுதியாக இருந்த நிலையில், அவரை எப்படியாவது கட்சியிலேயே தக்கவைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் (RSS) இயக்கம் அதிரடியாகக் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணாமலை போன்ற ஒரு முகத்தை பாஜக இழக்கக் கூடாது என்று பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ் தலைமை அவசர சமிக்ஞை அனுப்பியுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்தத் திடீர் தலையீடு காரணமாகவே அண்ணாமலை தற்போது டெல்லியிலேயே தங்கி, மேலிடத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அண்ணாமலையைச் சமாதானப்படுத்த பாஜக மேலிடம் தற்போது சமரச ஃபார்முலா ஒன்றை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்ந்து நீடிப்பார் என்றும், நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்து சமரசம் செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக-விற்கு டஃப் கொடுக்க அண்ணாமலை வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் பிடிவாதமாக இருப்பதால், டெல்லி அரசியல் களம் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
