உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரியான ‘பிரிகேடியர்’ போல வேடமிட்டு உலா வந்த 21 வயது வாலிபர் ஆர்யன் வர்மா ராணுவப் படையினரால் நடத்தப்பட்ட ரகசிய ஆப்பரேஷன் மூலம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதலே இவர் ராணுவ உடை அணிந்து வலம் வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ராணுவ அதிகாரிகள் இவரைக் கண்காணிக்கத் தொடங்கினர். தொடர்ந்து, அவரைப் பிடிக்க ஒரு தந்திரமான திட்டத்தைத் தீட்டினர்.

“>

அதன்படி, ராணுவ அதிகாரிகள் சாதாரண உடையில் பொதுமக்கள் போல் நடித்து, ஆர்யன் வர்மாவைத் தொடர்புகொண்டு, தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் உரை நிகழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று, ஷாஜஹான்பூர் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தியாகிகள் அருங்காட்சியகத்திற்கு பிரிகேடியர் உடையில் வந்த அவரை ராணுவத்தினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஆர்யன் வர்மா, ராணுவ நட்சத்திரங்கள் மற்றும் கொடிகள் பொருத்தப்பட்ட ஒரு சொகுசு எஸ்.யு.வி காரில் வந்து இறங்கியதுடன், போலி தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் போன்ற தோற்றத்தில் இரண்டு பவுன்சர்களையும், ஒரு டிரைவரையும் தன் பாதுகாப்பிற்காக உடன் அழைத்து வந்துள்ளார்.

இதனால் அவரிடமிருந்து போலி பிரிகேடியர் அடையாள அட்டை, போலி ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி முத்திரை, ஒரு போலி பிஸ்டல் மற்றும் ராணுவக் பிரம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், டெல்லியில் தங்கி நீட் தேர்விற்குப் படித்துப் பலமுறை தோல்வியடைந்த இந்த வாலிபர், சமூகத்தில் தன்னை ஒரு பெரிய ராணுவ அதிகாரியாகக் காட்டிக் கொள்வதற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.