அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தங்களின் சட்டவிரோத தொழிலுக்காக பூமிக்கு அடியில் சுமார் 17 மீட்டர் ஆழத்தில் ‘கோகோயின் நெடுஞ்சாலை’ என்ற அதிநவீன ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை அமைத்திருந்த பகீர் விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கலிபோர்னியாவின் ஓட்டே மேசா பகுதியில் உள்ள ‘பை 4 லெஸ்’ (Buy 4 Less) என்ற சாதாரண கடை ஒன்றின் பின்புறம் லாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், சந்தேகமடைந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த கடையின் உள்ளே இருந்து மெக்சிகோவின் டிஜுவானா நகரம் வரை சுமார் 590 மீட்டர் நீளத்திற்குச் செல்லும் பிரம்மாண்ட சர்வதேச சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்து அதிகாரிகள் மிரண்டு போயுள்ளனர்.

கான்கிரீட் சுவர்கள், மின்சார வசதி, காற்றோட்ட வசதி மற்றும் போதைப்பொருள் மூட்டைகளைக் கடத்த சிறிய ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரகசிய ஹைட்ராலிக் லிப்ட் எனப் பல கோடிகளைப் கொட்டி மிக நவீனமாக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த அதிரடி சோதனையின் போது சுரங்கப்பாதை மற்றும் அங்கிருந்த லாரியில் இருந்து சுமார் 375 கோடி ரூபாய் ($45 Million) மதிப்புள்ள 1,000 கிலோ தூய்மையான கோகோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் தொடர்புடைய 2 அமெரிக்கர்கள் மற்றும் 2 மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என 4 சர்வதேச கடத்தல்காரர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இந்த எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 99-ஆவது சுரங்கப்பாதை இதுவாகும் என்பதுடன், போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களுக்கு அமெரிக்க அரசு வைத்துள்ள மிகப் பெரிய செக் ஆக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.