வறுமையும் சோகமும் சூழ்ந்த நிலையிலும் தனது படிப்பை கைவிடாமல், ஒன்றரை வயது தம்பியை மடியில் சுமந்தபடி பள்ளிக்கு வரும் நேபாளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியின் பாசப் போராட்டம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கி வருகிறது.

இணையத்தில் படுவேகமாகப் பரவி வரும் இந்த நெகிழ்ச்சியான வைரல் வீடியோவில், பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் தனது பெஞ்சில் சோர்வாகத் தலைசாய்த்து அமர்ந்திருக்க, அவரது மடியில் ஒரு பச்சிளம் குழந்தை உறங்கிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்களின் தகவல்களின்படி, 9-ஆம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவியின் பெயர் அஸ்மிதா தமாங் (Asmita Tamang) ஆகும். சமீபத்தில் இவருடைய தாய் எதிர்பாராதவிதமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தை வழிநடத்த வேண்டிய பெரிய பொறுப்பு இந்தச் சிறு வயதிலேயே அஸ்மிதாவின் தோள்களில் விழுந்துள்ளது.

இவர்களின் தந்தை தினசரி கூலி வேலைக்காகக் காலையிலேயே வீட்டை விட்டுச் சென்றுவிடுவதால், வீட்டில் குழந்தையைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையிலும் தனது கல்வியை பாதியில் நிறுத்திவிட விரும்பாத அஸ்மிதா, தினசரி தனது ஒன்றரை வயது தம்பியைத் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளார். வகுப்பறையில் தம்பியைத் தனது மடியிலேயே தூங்க வைத்துக் கொண்டு, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களையும் கவனித்து வருகிறார்.

ஒரு தாயைப் போலத் தனது தம்பியின் உணவு, பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொண்டே, தனது எதிர்காலக் கனவிற்காக அஸ்மிதா படித்து வரும் இந்த எளிய மற்றும் எதார்த்தமான வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் இதயங்களையும் உருக வைத்துள்ளது.

“சிறு வயதிலேயே தாயை இழந்தாலும், தம்பிக்கு ஒரு தாயாக மாறிப் படிக்கும் இந்தச் சிறுமியின் தைரியத்திற்குத் தலைவணங்குகிறோம்” என்று பலரும் இவரைப் பாராட்டி வருவதால், இந்த உருக்கமான செய்தி தற்பொழுது இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது