சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சென்னை மெரினா கடற்கரைக்கு விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் வந்திருந்த 6 வயது சிறுமி ஒருவர், அங்கிருந்த குதிரையில் சவாரி செய்துள்ளார்.
அப்போது, குதிரையை ஓட்டிச் சென்ற நித்தீஷ் என்ற இளைஞர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டு அத்துமீறியதாகத் தெரிகிறது. சிறுமியின் நடத்தையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், இதுகுறித்து விசாரித்தபோது குதிரை ஓட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரத்தை சிறுமி அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், சிறுமியிடம் அத்துமீறிய குதிரை ஓட்டி நித்தீஷ் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில், சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
