உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு தினமும் குளிப்பது என்பது நமது பொதுவான பழக்கமாகும். ஆனால், ஆப்பிரிக்காவின் வட நமீபியா காடுகளில் வாழும் ‘ஹிம்பா’ என்ற பழங்குடியின பெண்கள், தங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே தண்ணீரில் குளிக்கிறார்கள்.
சுமார் 50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த பழங்குடியினர், இன்றும் தங்களின் நூறாண்டு கால பழமையான பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, இந்தப் பெண்களுக்குத் தண்ணீரைப் பயன்படுத்திக் குளிக்கவோ அல்லது ஆடைகளைத் துவைக்கவோ அனுமதி இல்லை.
இவர்கள் தங்களின் திருமண நாளன்று மட்டும்தான் முதலும் கடைசியுமாகத் தண்ணீரில் குளிக்கிறார்கள். அப்படியிருந்தும், இவர்கள் தங்களை எப்படிச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது வியப்பிற்குரியது.
இப்பெண்கள் சில மூலிகைகள் மற்றும் கட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு எரித்து, அதிலிருந்து வரும் புகையையும் ஆவியையும் தங்கள் உடலில் காண்பித்துக் கொள்கிறார்கள். இந்த ‘புகைக் குளியல்’ உடலின் துர்நாற்றத்தைப் போக்கி, கிருமிகளை அழிக்கிறது.
மேலும், கடுமையான வெயில் மற்றும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க, விலங்குகளின் கொழுப்பு மற்றும் ‘ஹேமடைட்’ என்ற சிவப்பு மண்ணைக் கலந்து ஒரு கலவையைத் தங்கள் உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்.
இதனால் இவர்களது உடல் சிவப்பாகவும், மிகவும் பொலிவாகவும் மாறுகிறது. இந்த இயற்கை வழிகளால் தங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் இந்த ஹிம்பா பழங்குடியின பெண்கள், ஆப்பிரிக்காவின் மிக அழகிய பெண்களாகக் கருதப்படுகிறார்கள்.
