ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு நிரந்தரப் போக்குவரத்துக் கட்டணம் விதிக்க வேண்டும் என்ற ஈரானின் முன்மொழிவை கத்தார் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய கத்தாரின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ஷேக் சவுத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, இத்தகைய நிரந்தரக் கட்டணங்கள் இறுதியாக நுகர்வோர் மீதுதான் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் கத்தார் மற்றும் பிற வளைகுடா நாடுகள் இதனை எதிர்ப்பதாகக் கூறினார்.

இருப்பினும், கடல்வழிப் பாதையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது போன்ற குறிப்பிட்ட பாதுகாப்புப் பணிகளுக்காகவும் ஒரு தற்காலிக சுங்கக் கட்டணத்தை விதிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மூடியதால் உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இந்தச் சுங்கக் கட்டண யோசனையை முற்றிலும் நிராகரித்துள்ளன. இதற்கிடையில், அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இத்தகைய சூழலிலும், கத்தார் இரு நாடுகளுடனான தனது உறவைச் சமநிலையாகக் கொண்டு செல்ல விரும்புவதோடு, ஈரானை எதிர்கொள்ள வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்துடன் இணைந்து ஒரு பொதுவான உத்தியை உருவாக்கவும் முயன்று வருகிறது.