திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களைச் சுரண்டி பிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கவே மக்கள் தங்களை வெற்றி பெறச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்று சேவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதை எந்தக் கடவுளும் சொல்லவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். நேற்று வரை சாதியை வைத்துப் பேசிவிட்டு, இன்று அதே சாதியைச் சார்ந்தவர்களை அவமதித்துவிட்டதாகக் கூறுவது ஏன் என்றும், தவறு செய்தவர்களைத் தண்டித்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம் வருகிறது என்றும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குப் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் வழக்கம் இல்லை என்று விமர்சித்துள்ள அவர், திருச்செந்தூர் கோயிலில் நடந்து வரும் மேலும் பல முறைகேடுகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.