2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பின்னரும், தமிழக அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாகவே காணப்படுகிறது. தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெரும் அதிர்ச்சியில் உள்ளன.
குறிப்பாக, அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைந்தது அதிமுக தலைமைக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது.
இதனால், கட்சியில் இருக்கும் மற்றவர்கள் யாராவது தவெக பக்கம் மாறுவார்களா என்ற அச்சமும், உட்கட்சிப் பூசலும் நீறுபூத்த நெருப்பாக நீடிக்கிறது. தவெக-வின் எழுச்சியால் திமுக தன் கூட்டணிக் கட்சிகளை இழந்துள்ள நிலையில், அதிமுக தன் சொந்த எம்.எல்.ஏ-க்களையே இழந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இதில் திருச்சி கிழக்குத் தொகுதி, முதல்வர் விஜய் வெற்றி பெற்றுப் பின் ராஜினாமா செய்த தொகுதியாகும்.
தற்போது 107 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இந்த 5 தொகுதிகளிலும் வென்று தனது பலத்தை 112 ஆக உயர்த்தி ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாகக் களம் இறங்குகிறது. அதேநேரம், தனது பலத்தை நிரூபிக்க திமுக-வும் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டு வருகிறது.
ஆனால், தொடர் தோல்விகளாலும் பிளவு அச்சத்தாலும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்று அதிமுக ஆலோசித்து வரும் நிலையில், நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
