பெருந்துறை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்த ஜெயக்குமார், பெருந்துறைக்கு வந்தார். , அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி, மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆனந்த மோகன், சண்முகன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே 38 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருவதாகவும், இது மக்கள் விரும்பும் ஆட்சியாகத் திகழ்வதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அதிமுக மற்றும் திமுக என்றுமே கூட்டணி அமைத்தது இல்லை என்றும், ஜெயலலிதாவைச் சிறையில் அடைத்த திமுகவுடன் கூட்டணி வைக்கத் துடித்து குதிரை பேரத்தில் ஈடுபட்டது எடப்பாடி பழனிசாமி தான் என்றும் சாடினார்.
திமுகவுடன் கூட்டணி சேர நினைத்த எடப்பாடி பழனிசாமி உண்மையில் அதிமுகவைச் சேர்ந்தவர் தானா என்ற சந்தேகம் எழுவதாகக் கூறிய அவர், இந்த அதிருப்தி காரணமாகவே ஜெயக்குமார் போன்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாக விளக்கினார்.
தவெக தனித்து நின்று பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை வென்றெடுத்ததால் தங்களுக்குக் குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக அரசின் ஆட்சேபனையை மத்திய அரசிடம் வலுவாகத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
