சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், இந்தக் கூட்டத்தைக் கூட்ட தாங்கள் பட்ட கஷ்டங்களையும், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரின் கிண்டல்களுக்குப் பதிலடி கொடுத்தும் இளைஞர் ஒருவர் பேசிய பேச்சு அரசியல் களத்தில் செம வைரலாகி வருகிறது. “20 பேர் கூட வரமாட்டாங்க, இதுக்கு ஒரு நிகழ்ச்சியா?” எனத் தங்களைக் கேலி செய்த மாற்றுக் கட்சியினருக்கும், குறிப்பாக தவெக-வின் ஹம்ஸா அலி உள்ளிட்ட தோழர்களுக்கும் மேடையிலேயே அவர் அதிரடி நோஸ்கட் கொடுத்துள்ளார்.
“திமுக ஜென்சி மீட்டிங்குக்கு வந்துட்டு, போனதுக்கு அப்புறம் என் போன் வால்பேப்பர்ல என் தலைவன் (விஜய்) தான் இருக்கான்னு வீடியோ போடுற நண்பர்களுக்குச் சொல்றோம்; இங்கு கூடியிருக்கிற யாருக்கும் நாங்க பணமும் தரல, சோறும் போடல.. எங்களால் இயன்ற டீயையும், பிஸ்கட்டையும் மட்டும்தான் கொடுத்தோம், ஒரே ஒரு போஸ்டர் அறிவிப்பில் இந்த ஜென்சி படை தன்னிச்சையாகக் கூடியிருக்கிறது” என ஆக்ரோஷமாக முழங்கினார்.
மேலும், போதிய வசதிகள் இல்லாததால் இந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிடலாம் என்று நினைத்தபோது, அண்ணன் கோவை லெனின் சமூக வலைத்தளத்தில் போட்ட ஒரு பதிவுதான் தங்களுக்குப் பேரெழுச்சியைக் கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“கடந்த 2011-ல் திமுக மிக மோசமான தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டபோது, பெரியார் திடலில் சமூக வலைத்தள மாணவர்கள் ஒன்று கூடி எப்படிக் கழகத்தைக் காக்க நினைத்தார்களோ, அதேபோல் 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்துவிட்டது என்ற நிலை வந்தவுடன் மீண்டும் இந்த இயக்கத்தைக் காக்க 2011 கூட்டம், இன்று ‘ஜென்சி திமுக’ என்ற பெயரில் திரண்டிருக்கிறது” என கோவை லெனின் குறிப்பிட்டிருந்ததை மேடையில் நினைவு கூர்ந்தார்.
கலைஞரின் கொள்கைகளால் பயனடைந்த இளைஞர்கள், தமிழ்நாட்டை மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகமே ஆள வைக்க உத்வேகத்துடன் களம் காண வேண்டும் என அவர் பேசிய இந்த அனல் பறக்கும் பேச்சு சோஷியல் மீடியாவில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
