தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மிகக் கடுமையான எச்சரிக்கையையும், அழுத்தமான வலியுறுத்தலையும் விடுத்துள்ளது. “மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், அதற்காகப் போராடுவதிலும் தவெக அரசுக்கு எவ்வித ஊசலாட்டமும், தயக்கமும் இருக்கக் கூடாது” என்று சிபிஎம் மாநில தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

​மாநிலத்தின் வாழ்வாதார உரிமைகளில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று கூறியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் மக்கள் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்புக்கு வரும் மாநில அரசு மாறலாமே தவிர, மாநில உரிமைகளும் கூட்டாட்சித் தத்துவமும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்புகள், அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் இன்று (மே 29) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், தவெக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அனல் பறக்கும் பதிவை வெளியிட்டுள்ளது.