தென்மேற்குப் பருவமழை மிகத் தீவிரமடைய உள்ள நிலையில், பொதுமக்கள் எவ்விதப் பாதிப்பும் இன்றி தடையற்ற மற்றும் தரமான மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்யத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பருவமழைக் காலத்தில் ஏற்படும் மின்தடைகள், மின்கம்பங்கள் சரிவு போன்ற அவசரக் காலப் பாதிப்புகளைப் போர்க்கால அடிப்படையில் சரி செய்வதற்காகத் தமிழ்நாடு முழுவதும் கூடுதல் தற்காலிகப் பணியாளர்களைப் பணியமர்த்த மின்வாரியம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான கோடைக் காலத்திற்கு இந்த கூடுதல் பணியாளர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தென்மேற்குப் பருவமழைக் கால அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தக் கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 45 நாட்களுக்கு நீட்டித்து மின் பகிர்மான கழகம் அதிரடி அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை இந்தக் கூடுதல் பணியாளர்கள் களத்தில் இருந்து தடையற்ற மின் விநியோகப் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
