ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இன்று அதிகாலை மீண்டும் கடுமையான ராணுவ மோதல்கள் வெடித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் அப்பாஸ் நகரின் விமான நிலையப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் 4 தாக்குதல் டிரோன்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்குப் பழிவாங்கும் விதமாக, அடுத்த சில மணி நேரங்களிலேயே குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் ஒன்றின் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதைவிட மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா தொடர்புடைய 5 சர்வதேசக் கப்பல்களைத் தடுத்து எச்சரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் இணைந்து கூட்டாகக் கட்டுப்படுத்துவது போன்ற புதிய அமைதி ஒப்பந்தம் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஹார்முஸ் சர்வதேசக் கடல்வழிப் பாதையை எந்தவொரு தனி நாடும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
