இஸ்ரேல் நாட்டை அங்கீகரித்தாலோ அல்லது ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைந்தாலோ, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலுடன் சுமுக உறவை ஏற்படுத்துமாறு பல முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இதனால் பாகிஸ்தானிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
https://x.com/upuknews1/status/2059863032596173180?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2059863032596173180%7Ctwgr%5Ec1ddfb9b6d9a7c5f224d749db1b263b15aa546c9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fviral%2Flashkar-terrorist-saifullah-kasuri-threatens-pakistan-pm-shehbaz-sharif-army-chief-asim-munir-over-possible-israel-recognition-will-be-assassinated-destroyed-video
பக்ரீத் தொழுகைக்குப் பிறகு தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய சைஃபுல்லா கசூரி, “இஸ்ரேலை ஆதரிக்கும் எந்தவொரு பாகிஸ்தானிய தலைவரோ அல்லது ராணுவ அதிகாரியோ படுகொலை செய்யப்படுவார்கள்; அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். இஸ்ரேலை அங்கீகரிப்பது பற்றி பேசுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் ஒழிக்கப்படுவார்கள்” என்று மேடையில் பகிரங்கமாகப் பேசினார்.
மேலும், எந்தவொரு சர்வதேச சக்தியும் முஸ்லிம் நாடுகளை இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்த கட்டாயப்படுத்த முடியாது என்று கூறிய அவர், ஜிகாத் மற்றும் தியாகம் போன்ற மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும் பேசினார். பாகிஸ்தானின் ராணுவத் திறன் இஸ்ரேலுக்கு நிகராக வளர்ந்துள்ளதாகவும், பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
