அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தனது மனைவி ஜீனெட்டுடன் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலுக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “தாஜ்மகால் உலகின் மிகச்சிறந்த காதல் சின்னங்களில் ஒன்று” என்று உருகிப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே தற்போதைய பதற்றமான அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்து, ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் அமெரிக்க அமைச்சரை சமூக வலைதளத்தில் மிகக் கடுமையாக வம்பிழுத்து வச்சு செய்துள்ளது.

மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி தாஜ்மகால் முன்னால் அமர்ந்திருக்கும் அதே புகைப்படத்தை எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்து, “ரூபியோவுக்கு ஒருவேளை வரலாறோ அல்லது கட்டிடக்கலையோ தெரிந்திருந்தால், அவர் கண்டிப்பாக இந்த இடத்திற்கு வந்து இப்படி போஸ் கொடுத்திருக்க மாட்டார்” என்று ஈரான் தூதரகம் அதிரடியாகக் குத்தியுள்ளது.

தாஜ்மகால் என்பது முகலாய பேரரசர் ஷாஜகான் தனது ஈரானிய வம்சாவளி மனைவியான மும்தாஜ் மஹால் மீதான காதலால், ஈரானிய கட்டிடக் கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கிய ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதை ஈரான் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

“ஈரானியர்களின் உழைப்பிலும், ஈரானிய பெண்ணின் நினைவாகவும் உருவான ஒரு காதல் சின்னத்தின் முன்னால் நின்று நீங்கள் ரசிக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் அமெரிக்க அரசாங்கமோ இன்று ஒட்டுமொத்த ஈரான் நாகரிகத்தையே உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம் என்று மிரட்டுகிறது, பிற நாகரிகங்களை அவமதிக்கிறது” என்று ஈரான் தூதரகம் மிகக் காட்டமாக சாடியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஈரானை எச்சரிக்கும் வகையில் பேசிய பேச்சுக்களைக் குறிப்பிட்டு, ஈரான் தூதரகம் நக்கல் பாணியில் அமெரிக்க அமைச்சரை இப்படி உலக அரங்கில் நெட்டித் தள்ளியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.