மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்) பிரஷாந்த் பர்மன், கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு, போலீசாரிடமும் பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு தனது அதிவேக மகிந்திரா தார் காரில் குடிபோதையில் தாறுமாறாக வந்த பிரஷாந்த் பர்மன், நியூ டவுன் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்த நபர் மீது பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்தில் காயமடைந்தவரை அங்கிருந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், காரை ஓட்டி வந்த பிரஷாந்த் பர்மனை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்போது உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், போலீசாரையும் அங்கிருந்த பொதுமக்களையும் பார்த்து ஆவேசமாக கத்தியதோடு, தனது செல்போனை காட்டி மிரட்டும் தோணியில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்தனர். கைது செய்யப்பட்ட பிரஷாந்த் பர்மன், கடந்த 2025-ம் ஆண்டு நடந்த தங்க நகை வியாபாரி ஸ்வபன் கமாலியா என்பவரின் கொடூர கொலை வழக்கில் மிக முக்கியமான குற்றவாளி என்பதும், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் இவரது பெயர் நேரடியாக இல்லை என்றாலும், தலைமறைவாக இருக்கும் முக்கிய நபர் என போலீசார் இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். தற்போது விபத்து மற்றும் போதை ரகளை வழக்கில் சிக்கியுள்ள இவரை, பழைய கொலை வழக்கிலும் காவலில் எடுத்து விசாரிக்க பிதான்நகர் துப்பறியும் பிரிவு போலீசார் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர்.