தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக இரு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள சூழலில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தாராபுரம் தொகுதி சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல் ஆகிய மூன்று அதிமுக பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தவெக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்த இசக்கி சுப்பையா, கடந்த 2011 மற்றும் 2021 தேர்தல்களிலும் வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், தொகுதி மக்களிடையே பெரும் செல்வாக்கு மிக்க இவரது இந்த அதிரடி முடிவு அதிமுக தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.