புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச் சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சர் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மமக தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு” என்று மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் அளித்துள்ளார். திமுக – மமக கூட்டணி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களுக்குப் பதிலளித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

“திமுகவுக்கும் மமகவுக்கும் இடையே உள்ள உறவு வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல, அது கொள்கை உறவு. கடந்த 2019 மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் மமகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், நாட்டின் சூழல் கருதி மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மமக தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். 2021 மற்றும் அண்மையில் முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டோம்.

தொடர்ந்து சொந்தச் சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில், கட்சியின் பதிவை மீண்டும் மீட்பதற்காகவே வருங்காலத் தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது.

இதுவே மமக உயர்நிலைக் குழுவின் 5-ஆவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஊடகங்கள் முதல் 4 தீர்மானங்களை மறைத்துவிட்டு, ஐந்தாவது தீர்மானத்தை மட்டும் தவெக அரசுடன் முடிச்சுப் போட்டுத் திரித்துப் பரப்புகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, வக்பு திருத்தச் சட்ட எதிர்ப்பு, மாநில உரிமைகள் பாதுகாப்பு எனப் பல தருணங்களில் திமுகவுடன் மமக இணைந்து களம் கண்டுள்ளது. எனவே, தவறான புரிதலால் தேவையற்ற விமர்சனங்கள் செய்வதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டின் நலனைக் காக்கத் தொடர்ந்து திமுகவுடன் இணைந்து களமாடுவோம் என்று ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.