விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பெண்களின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதில் கடந்த திமுக ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியும் இருக்கிறதோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
தற்போதைய முதலமைச்சர் தங்களது சுயநலக் கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை முதலமைச்சர் மறந்துவிடாமல், பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
