ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வரதட்சணை கொடுமை மற்றும் கணவனின் கொடூரத் தாக்குதலால் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவன் மனைவியை மிருகத்தனமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் கல்யான்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா என்ற பெண்ணுக்கும், பொதுப்பணித்துறையில் நிர்வாகப் பொறியாளராக பணிபுரியும் கௌதம் மீனா என்பவருக்கும் கடந்த 2015-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கணவனின் தொடர் சித்திரவதையால் மனமுடைந்த அனு மீனா, கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறுகையில், “கௌதம் மீனா தினமும் மதுபோதையில் வந்து அனுவை மிருகத்தனமாகத் தாக்குவார். கடந்த மார்ச் மாதம், வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து அனுவைக் கொலை செய்யவும் முயன்றார். இதனால் பயந்துபோய் எங்களுடன் வந்த அனுவை, குடும்பத்தினர் சமாதானம் செய்து மீண்டும் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர் பயத்துடனேயே வாழ்ந்து வந்துள்ளார்” என்றனர்.

 

இவர்களது 10 வயது மகன் மகிர், “அப்பா எப்போதுமே அம்மாவை இரக்கமில்லாமல் அடிப்பார்” என்று உறவினர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். 8 வயது மகள் செமைரா, “சுற்றுலா சென்ற இடத்திலும், ஒரு திருமண விழாவிலும் கூட பொதுமக்களுக்கு முன்னால் அம்மாவை அப்பா அடித்தார்” என்று சாட்சியம் அளித்துள்ளார்.  அனு மீனா இறந்து சில நாட்களுக்குப் பிறகு, அவரது 10 வயது மகன் மகிர், அம்மாவின் செல்போனை அன்லாக் செய்து பார்த்துள்ளார். அப்போது, கௌதம் மீனாவே தனது மனைவியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, தாக்கியதை வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சிசிடிவி காட்சியில், கௌதம் மீனா தனது மகன் முன்னிலையிலேயே, மனைவி அனுவை செருப்பால் அடிப்பது, கீழே தள்ளிவிட்டு அவர் மீது துப்புவது போன்ற கொடூர காட்சிகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்போன் மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.