நவிமும்பை வாஷி செக்டார் 1 பகுதியைச் சேர்ந்த 38 வயதான சைலேந்திர பரம்ஹன்ஸ் சிங் என்பவர், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் பான்வெல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அவர் சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள உரான் பட்டா மேம்பாலத்திற்கு அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம், சைலேந்திராவின் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஸ்கூட்டர் அப்பளமாய் நொறுங்கியதோடு, சைலேந்திராவுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனத்தின் டிரைவர், காயமடைந்தவருக்கு எந்த உதவிகளையும் செய்யாமல் காரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சைலேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஹிட்-அண்ட்-ரன் விபத்து குறித்து ஐரோலியைச் சேர்ந்த தொழிலதிபர் தன்ஜி கோகர் முடக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சிபிடி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டுப் பறந்த அந்த எமவாகனத்தையும், அதை ஓட்டி வந்த டிரைவரையும் பிடிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.
