மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே  புகழ்பெற்ற துளஜா பவானி அம்மன் கோயிலில், வினோதமான முறையில் நபர் ஒருவர் அம்மனின் வெள்ளி கிரீடத்தைத் திருடிச் சென்ற சம்பவம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. பக்தர் வேடமிட்டு, முகத்தில் முகக்கவசம் மற்றும் தலையில் தொப்பி அணிந்து வந்த நபர் ஒருவர், கோயிலுக்குள் நுழைந்து அம்மனை மிகவும் பக்தியோடு கைகூப்பி வணங்கினார். கையில் தேங்காயுடன் வந்த அவர், அம்மனுக்குக் குங்குமப் பொட்டும் வைத்துள்ளார். அவரது இந்த ‘பக்தி நாடகத்தைக்’ கண்டு அங்கிருந்த பூசாரிக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, பூசாரியின் கவனம் சற்று திசை திரும்பிய நொடியில், அந்த நபர் யாரும் எதிர்பாராத காரியத்தைச் செய்தார். திருடுவதற்கு முன்பாக அம்மனிடம் கைகூப்பி ரகசியமாக மன்னிப்பு கேட்ட அந்த நபர், அடுத்த கணமே கருவறையில் இருந்த சுமார் 1 கிலோ எடையுள்ள, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தைச் சாமர்த்தியமாகத் தூக்கினார். பின்னர், கைக்குட்டையில் அதை மறைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் கோயிலை விட்டுத் தப்பியோடினார்.

 

கருவறையில் இருந்த அம்மன் கிரீடம் மாயமாகி இருப்பதை உணர்ந்த பூசாரி அதிர்ச்சியடைந்து கோயில் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக தலேகான் தபாடே போலீஸாருக்குப் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், திருடனின் “பக்தியும் திருட்டும்” கலந்த விசித்திரக் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. எனினும், அவர் முகக்கவசம் அணிந்திருந்ததால் அடையாளம் காண்பதில் போலீஸாருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.