அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மார்கோ ரூபியோ, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இனவெறிக் கருத்துகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மேலும் ‘ “எல்லா நாட்டிலும் சில முட்டாள்கள் இருப்பார்கள்” என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கா எப்போதும் குடியேறிகளை வரவேற்கும் நாடு என்றும், இந்தியர்களுக்கு எதிரான இனவெறி சார்ந்த புகார்களை அமெரிக்க அரசு மிகுந்த தீவிரத்தன்மையுடன் அணுகி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவு தொடர்பான வியக்கத்தக்க அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ரூபியோ நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நட்புறவு மற்றும் நீண்டகால கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.