ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கௌதம் மீனா என்ற அரசுப் பொறியாளர், தனது மனைவி அனு மீனாவைத் தொடர்ந்து மதுபோதையில் உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவனின் கொடுமை தாங்க முடியாமல், கடந்த ஏப்ரல் மாதம் அனு மீனா தற்கொலை செய்துகொண்டார்.

இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, போலீசாரிடம் பேசிய அவர்களின் குழந்தைகள், தங்கள் தந்தை அம்மாவைத் தலைக்காயங்கள் ஏற்படும் அளவிற்கு அடிப்பதையும், அவர் தாகத்தினால் துடிக்கும்போது தண்ணீர் கூட கொடுக்கவிடாமல் தடுத்ததையும் அழுதுகொண்டே விவரித்தது அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

மேலும், அனு மீனாவின் மகன், தனது தந்தையின் கொடூரச் செயல்களைப் பதிவு செய்திருந்த வீடியோக்களை மீட்டெடுத்து போலீசாரிடம் ஆதாரமாக ஒப்படைத்துள்ளான். காரில் சென்றபோது அனு மீனாவையும் அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசிய வீடியோ ஆதாரங்களும் இதில் அடங்கும். கணவன் கௌதம் மீனா, செய்த குற்றத்திற்கு வருந்தாமல் திமிராகப் பேசி வருவது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.