உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தெருவில் மற்ற சிறுவர்களுடன் தள்ளுவண்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன், வண்டிக்கும் சுவற்றுக்கும் இடையே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அஸ்ஜத் (6) என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அந்தத் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கைத்தள்ளுவண்டியை வைத்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர். சில சிறுவர்கள் அந்த வண்டியின் மீது ஏறி அமர, மற்ற சிறுவர்கள் பின்னால் இருந்து அந்த வண்டியைத் தள்ளி விளையாடியதாகக் கூறப்படுகிறது. சிறுவர்கள் வண்டியை வேகமாகத் தள்ளியபோது, எதிர்பாராதவிதமாக சிறுவன் அஸ்ஜத் ஓடி வந்து அந்த நகரும் வண்டியின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டான். வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக முன்னோக்கிச் சென்றதால், அங்கிருந்த சுவற்றுக்கும் தள்ளுவண்டிக்கும் இடையே சிறுவன் அஸ்ஜத் பலமாக நசுக்கப்பட்டான்.

 

சிசிடிவி காட்சிகளின்படி, வண்டி மோதிய அதிர்ச்சியில் சுதாரித்துக் கொண்டு, சிறுவன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளான். ஆனால், பலத்த காயமடைந்ததால் சில அடிகள் மட்டுமே எடுத்து வைத்த அந்தச் சிறுவன், அடுத்த சில நொடிகளில் தரையில் சுருண்டு விழுந்து மயங்கினான். சிறுவன் அடிபட்டு விழுந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். உடனடியாக அந்தச் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், பலத்த காயம் அடைந்திருந்ததால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.