திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூக்கு எலும்புப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வந்த மாணவிக்கு மயக்க மருந்து (Anesthesia) செலுத்திய பிறகு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், இதில் ஏதோ மர்மம் இருப்பதாகக் கூறி மாணவிகள் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்துப் போராடினர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக தற்காலிக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும், போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் இருந்து சிறப்பு விசாரணைக் குழு ஒன்று திருச்சிக்கு விரைந்து வந்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் தவறு இழைத்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்; புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சையை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அதிரடி உறுதிமொழியை ஏற்று மாணவிகள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
